'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு
சனிக்கிழமை அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை கேலி செய்யும் வகையில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்கள் எழுப்பப்பட்டதை திமுக தலைவரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, உதயநிதியை "விஷம் பரப்பும் கொசு" என்று விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் வீரர்களை நோக்கி 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது. பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வான் டக் அவுட்டு ஆனவுடன் இந்த கோஷங்கள் எழுப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கிரிக்கெட் போட்டிக்குள் மதத்தை கொண்டு வந்தது தவறு என்று பலர் விமர்சித்துள்ளனர்.
'மலேரியா கொசு மீண்டும் விஷத்தை பரப்பத் தொடங்கியுள்ளது': கவுரவ் பாட்டியா
இன்னொரு தரப்பினர், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் மைதானத்தில் ரிஸ்வான் நமாஸ் நடத்தியதை விமர்சித்துள்ளனர். இது குறித்து நேற்று ட்விட்டரில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், "பாகிஸ்தான் வீரர்களிடம் ரசிகர்கள் நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. நாடுகளுக்கு இடையே உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்கும் விளையாட்டை வெறுப்பை பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது." எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு ட்விட்டரில் பதிலளித்திருக்கும் கவுரவ் பாட்டியா, "இந்த வெறுக்கத்தக்க டெங்கு, மலேரியா கொசு மீண்டும் விஷத்தை பரப்பத் தொடங்கியுள்ளது. மைதானத்தில் நமாஸ் செய்வதற்காக போட்டி நிறுத்தப்படும்போது உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் கடவுள் ராமர் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் வசிக்கிறார், எனவே ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லுவோம்." என்று கூறியுள்ளார்.