Page Loader
தீபாவளி - தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள்
தீபாவளி - தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள்

தீபாவளி - தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள்

எழுதியவர் Nivetha P
Nov 08, 2023
06:37 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக மருத்துவத்துறை மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சிறப்பு தீக்காய சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகளை இன்று(நவ.,8) துவங்கி வைத்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'தீ விபத்து இல்லா தீபாவளி என்னும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது' என்றும், 'தீயணைப்புத்துறை, காவல்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது எப்படி? வெடிப்பதற்குரிய நேரம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்' என்றும் தெரிவித்தார். மேலும் அவர், 'பாதுகாப்பு நடவடிக்கைகள் மீறி தீ விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

சிறப்பு 

750 படுக்கை வசதிகள் கொண்டு ஏற்பாடு 

அமைச்சர் கூறியதன்படி, தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் என மொத்தம் 95 மருத்துவமனைகளில் தீ விபத்தால் ஏற்படும் காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்கான சிறப்பு வார்டுகள் 750 படுக்கை வசதிகள் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தீ காயத்திற்கான மருந்துகள் உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தும் போதுமான அளவில் இருப்பு உள்ளதா என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே, இன்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் துவங்கியுள்ள இந்த சிறப்பு வார்டில் 5 வெண்டிலேட்டர் கருவிகள், ஆண்களுக்கான வார்டில் 12 படுக்கைகள், குழந்தைகளும் பெண்களும் அனுமதிக்கக்கூடிய வார்டில் 8 படுக்கை வசதிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.