LOADING...
தமிழ்நாட்டை நோக்கி வரும் 'தித்வா' புயல்; நாளை மறுநாள் சென்னையை நெருங்க வாய்ப்பு
நாளை மறுநாள் சென்னையை நெருங்க வரும் Ditwah

தமிழ்நாட்டை நோக்கி வரும் 'தித்வா' புயல்; நாளை மறுநாள் சென்னையை நெருங்க வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 28, 2025
06:18 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் இலங்கை அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை (நவம்பர் 27) 'தித்வா' புயலாக வலுவடைந்தது. இந்த புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், நாளை மறுநாள் சென்னை மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நெருங்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் தெரிவித்ததாவது: 'தித்வா' புயல் தற்போது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாளை மறுநாள் (நவம்பர் 30) இது தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கும். எனினும், இந்தப் புயல் சென்னையை கடக்க வாய்ப்பில்லை எனவும், சென்னையை கடந்து ஆந்திரா மாநிலம் நோக்கிச் செல்லவே அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை எச்சரிக்கை

தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு

நெருங்கி வரும் புயல் சின்னம் காரணமாக இன்று, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்குப் பலத்த சூறாவளி வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement