LOADING...
வேற்றுகிரகவாசிகளை தேடும் கூட்டுத் திட்டம்: பல நாடுகள் இணைந்து உருவாக்கி வரும் முப்பது மீட்டர் டெலஸ்கோப்
தொலைநோக்கியின் முதன்மை ஆடி (Primary Mirror) 30 மீட்டர் விட்டம் கொண்டது

வேற்றுகிரகவாசிகளை தேடும் கூட்டுத் திட்டம்: பல நாடுகள் இணைந்து உருவாக்கி வரும் முப்பது மீட்டர் டெலஸ்கோப்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 27, 2025
04:33 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ஒளியியல் தொலைநோக்கியான முப்பது மீட்டர் தொலைநோக்கி திட்டத்தை அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகின்றன. இந்த தொலைநோக்கியின் முதன்மை ஆடி (Primary Mirror) 30 மீட்டர் விட்டம் கொண்டது. இது 492 சிறிய அறுகோண (Hexagonal) கண்ணாடிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட கட்டமைப்பாகும். இந்த 492 கண்ணாடிகளையும் நானோ-மீட்டர் துல்லியத்தில் சீரமைக்கும் பொறுப்பு இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒளியியல்-இயந்திரவியல் அமைப்பு (Opto-Mechanical System) மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற முக்கிய தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.

ஆராய்ச்சி

பிரபஞ்சத்தின் ஆழத்தை நோக்கிய பயணம்

TMT தொலைநோக்கி பிரபஞ்சத்தின் ஆழமான பகுதிகளை ஊடுருவிப் பார்க்கவும், Big Bang-இற்கு பிறகு உருவான முதல் விண்மீன் திரள்களின் வடிவங்களைப் படிக்கவும் உதவும். இது கருந்துளைகள் மற்றும் தொலைதூர விண்மீன் திரள்கள் போன்ற மர்மங்களை அவிழ்க்கும் திறன் கொண்டது. இந்த தொலைநோக்கியை அமைப்பதற்காக முதலில் ஹவாயில் உள்ள மௌனா கீஆ மலை தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், உள்ளூர் பூர்வகுடி மக்களின் எதிர்ப்பு காரணமாக, இந்தியாவின் லடாக்கில் உள்ள ஹான்லே பகுதி ஒரு மாற்று இடமாகப் பரிசீலிக்கப்படுகிறது. இந்தத் தொலைநோக்கி 2030-களின் மத்திய பகுதியில் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானின் மூத்த விஞ்ஞானிகள், இந்தியாவின் தொழில்நுட்பப் பங்களிப்பால் திட்டம் நல்ல வேகத்தில் முன்னேறி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

தேடல்

வேற்றுகிரக வாழ்வுக்கான தேடல்

TMT திட்டத்தின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் சவால் நிறைந்த நோக்கம், பூமிக்கு அப்பால் வாழ்வு இருக்கிறதா என்ற கேள்விக்கு விடையளிப்பதாகும். இந்த தொலைநோக்கி சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களின் (Exoplanets) வாயுமண்டலத்தை நுட்பமாக பகுப்பாய்வு செய்யும். அந்தக் கோள்களின் வாயுமண்டலத்தில் ஆக்ஸிஜன், மீத்தேன், நீர் மூலக்கூறுகள் அல்லது பிற உயிரியல் மூலக்கூறுகள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதன் மூலம் வேற்றுகிரகங்களில் வாழ்வதற்கான அறிகுறிகளை இது தேடும். இந்த தொலைநோக்கி செயல்பாட்டிற்கு வரும்போது, பிரபஞ்சத்தைப் பற்றிய மனிதர்களின் புரிதலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.