LOADING...
இனி கொசுவை விரட்ட டிட்டர்ஜென்ட் போதும்: ஐஐடி டெல்லி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு
ஐஐடி டெல்லி ஸ்மார்ட் கொசுவிரட்டி சலவைத்தூள் கண்டுபிடிப்பு

இனி கொசுவை விரட்ட டிட்டர்ஜென்ட் போதும்: ஐஐடி டெல்லி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 27, 2025
04:56 pm

செய்தி முன்னோட்டம்

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) டெல்லி ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதுமையான கொசுவிரட்டி டிட்டர்ஜென்ட் சலவைத்தூளை (Mosquito-Repellent Detergent) உருவாக்கியுள்ளனர். இது கொசுக்களில் இருந்து துணிகளுக்குப் பாதுகாப்பை வழங்கி, கடிப்பதிலிருந்து காக்கிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

பாதுகாப்பு

துணியின் மீதான பாதுகாப்பை உறுதி செய்தல்

கொசுக்களை விரட்ட தற்போது திரவங்கள், சுருள்கள், லோஷன்கள் போன்ற பல முறைகள் இருந்தாலும், அவற்றின் செயல்திறன் காலப்போக்கில் குறையக்கூடும். ஆனால், ஐஐடி டெல்லி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள தூள் மற்றும் திரவ வடிவிலான இந்த ஸ்மார்ட் சலவைத்தூள், துணிகளைக் கழுவும்போது, அதன் செயல் மூலக்கூறுகள் துணியின் இழைகளுடன் வினைபுரிகின்றன. இதனால், கொசுக்கள் அந்தத் துணிகளின் மீது அமர்வதையும், கடிப்பதையும் தடுக்கின்றன. கொசுவின் உறிஞ்சும் வாய் (proboscis) துணி அமைப்பை எளிதில் ஊடுருவிச் செல்ல முடியும் என்பதால், அவை துணியில் அமர்வதைத் தடுப்பது மிகவும் முக்கியம். இந்தச் சலவைத்தூள், கொசுக்களின் வாசனை மற்றும் சுவை உணர்வுகளைத் தூண்டி, துணிகளை அவற்றிற்கு விரும்பத்தகாததாக மாற்றுகிறது.

செயல்திறன்

புதுப்பிக்கப்படும் செயல்திறன்

இந்தக் கண்டுபிடிப்பின் சிறப்பு என்னவென்றால், துணிகளை அடிக்கடித் துவைப்பதால், கொசு விரட்டும் பண்புகள் ஒவ்வொரு முறை துவைக்கும்போதும் புதுப்பிக்கப்படுகின்றன. இதனால் இதன் செயல்திறன் மற்றும் ஆயுட்காலம் உறுதி செய்யப்படுகிறது. வணிக ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட இந்தத் தயாரிப்பு, கொசுக்களை விரட்டுவதில் பயனுள்ளதாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் சலவைத்தூள் குறித்த காப்புரிமைக்கு (Patent) விண்ணப்பிக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் வணிக ரீதியிலான விற்பனைக்கு வரும் என்றும் ஐஐடி டெல்லி தெரிவித்துள்ளது.