அணுசக்தித் துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்க திட்டம்; பிரதமர் மோடி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் அணுசக்தித் துறையில் பல தசாப்தங்களாக இருந்து வந்த அரசு நிறுவனங்களின் ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, தனியார் நிறுவனங்களின் முதலீட்டிற்கு வழி திறக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (நவம்பர் 27) அறிவித்தார். இது அவரது மூன்றாவது பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்படும் மிகத் துணிச்சலான பொருளாதாரச் சீர்திருத்தங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
விண்வெளி
விண்வெளித் துறையின் வெற்றி உதாரணம்
2020-21இல் விண்வெளித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்காகத் திறந்துவிட்டபோது கிடைத்த வெற்றியைப் பிரதமர் மோடி சுட்டிக் காட்டினார். "விண்வெளித் துறையைத் திறந்தபோது, 300க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பில்லியன் கணக்கான தனியார் முதலீடுகள் மற்றும் உலகளாவிய அங்கீகாரம் கிடைத்தது. அதேபோன்ற வரலாற்றுச் சீர்திருத்தங்களை அணுசக்தித் துறையிலும் கொண்டு வரத் தயாராகி வருகிறோம்," என்று அவர் தெரிவித்தார். தற்போதுவரை, அணுசக்தி உற்பத்தியானது அணுசக்தித் துறை மற்றும் இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளது.
இலக்கு
அதிகரிக்கும் அணுசக்தித் திறன் இலக்கு
இந்தியாவின் தற்போதைய 8,000 MW அணுசக்தித் திறனை 2032ஆம் ஆண்டுக்குள் 22,480 MW ஆக உயர்த்துவதே இந்த மாற்றத்தின் முக்கிய இலக்காகும். புதிய கட்டமைப்பின் கீழ், தனியார் நிறுவனங்கள் சிறிய மாடுலர் ரியாக்டர்களை (SMRs) உருவாக்கவும், NPCIL உடன் இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படலாம். இந்த நடவடிக்கை, அணுசக்தி திட்டங்களில் தனியார் மூலதனம், வேகமான திட்டச் செயல்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிலக்கரியைக் குறைத்து, நாட்டின் தூய்மையான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும். இந்த அறிவிப்புக்குப் பின், அணுசக்தி விநியோகச் சங்கிலியுடன் தொடர்புடைய நிறுவனப் பங்குகளின் விலை 3% முதல் 8% வரை உயர்ந்துள்ளது.