Page Loader
விமானப்படை தொடர்புடைய விமான நிலையங்களில் ஜன்னல் ஷேட் விதியை நீக்கியது DGCA; புகைப்படம் எடுப்பதற்கான தடை நீட்டிப்பு
விமானப்படை தொடர்புடைய விமான நிலையங்களில் ஜன்னல் ஷேட் விதியை நீக்கியது DGCA

விமானப்படை தொடர்புடைய விமான நிலையங்களில் ஜன்னல் ஷேட் விதியை நீக்கியது DGCA; புகைப்படம் எடுப்பதற்கான தடை நீட்டிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 20, 2025
08:18 am

செய்தி முன்னோட்டம்

இந்திய விமானப்படை கூட்டுப் பயனர் விமான நிலையங்களில் (JUAs) சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அதன் விதிமுறைகளைத் திருத்தியுள்ளது. இந்த விமானப்படையுடன் கூட்டாக இயக்கப்படும் விமான நிலையங்களில் புறப்படும் மற்றும் தரையிறங்கும் போது விமான நிறுவனங்கள் இனி ஜன்னல் ஷேட்களை இறக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், வான்வழி மற்றும் தரை புகைப்படம் எடுப்பதற்கான தடை உறுதியாக நடைமுறையில் உள்ளது. சனிக்கிழமை (ஜூலை 19) இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு ஆலோசனையில், இந்திய விமானப்படையின் புதுப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து ஜன்னல் ஷேட்களை இயக்குவதற்கான உத்தரவு திரும்பப் பெறப்பட்டாலும், படங்கள் அல்லது வீடியோக்களை எடுப்பதற்கான கட்டுப்பாடு JUA களில் உள்ள அனைத்து நடவடிக்கைகளிலும் தொடர்ந்து பொருந்தும் என்று DGCA தெளிவுபடுத்தியது.

முன்னெச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தின்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்ட உத்தரவு

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்த பதட்டங்கள் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மே 2025 இல் இந்த உத்தரவு அறிமுகப்படுத்தப்பட்டது. ராணுவ செயல்பாடு உள்ள விமான நிலையங்களில் பயணிகள் புறப்படும்போதும் தரையிறங்கும் போதும், உணர்திறன் மிக்க காட்சிகளை கவனக்குறைவாகப் படம்பிடிப்பதைத் தடுக்க ஜன்னல் ஷேட் விதி உருவாக்கப்பட்டது. இந்த உத்தரவு குறிப்பாக மூலோபாய பாதுகாப்பு மண்டலங்களுக்கு அருகிலுள்ள விமான நிலையங்களுக்குப் பொருந்தும் மற்றும் 10,000 அடி உயரம் வரை நடைமுறையில் இருந்தது. அவசரகால வெளியேறும் ஜன்னல் மட்டுமே இந்த ஒழுங்குமுறைக்கு விதிவிலக்காக இருந்தன. இந்நிலையில், தற்போது இதில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.