பெற்றோர், சகோதரியை தானே கொலை செய்து விட்டு நாடகமாடிய டெல்லி நபர்
டெல்லியில் நடந்த மூன்று கொலை வழக்கில் அதிர்ச்சித் திருப்பமாக, தனது வீட்டில் பெற்றோரும் சகோதரியும் இறந்து கிடந்ததாக காவல்துறையில் புகார் அளித்தவர், அவர்களை கொலை செய்ததற்காக இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட 20 வயதான அர்ஜுன், தனது பெற்றோருடன் உறவை முறித்துக் கொண்டார். மேலும் பெற்றோர்கள் அவரை விட தனது சகோதரியை விரும்புவதால் வருத்தமடைந்தார். அதோடு அர்ஜுனின் தந்தை தனது சகோதரிக்கு சொத்தை மாற்ற திட்டமிட்டு இருந்ததும், அர்ஜுனை கோபப்படுத்தியது என்று போலீசார் தெரிவித்தனர்.
மர்மமான முறையில் இறந்து கிடைத்ததாக புகார்
டெல்லியை சேர்ந்த ராஜேஷ் குமார், அவரது மனைவி கோமல் மற்றும் அவர்களது மகள் கவிதா ஆகிய மூவரின் உடல்கள் கத்திக் காயங்களுடன் புதன்கிழமை காலை அவர்களது வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. காலை 5.30 மணிக்கு நடைப்பயிற்சி முடித்து திரும்பியபோது தனது குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை அர்ஜூன் கண்டதாக கூறியிருந்தார்.
கொலை செய்து நடனமாடியது அம்பலம்
அர்ஜுனின் அவசர அழைப்பு பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள், குற்றவியல் குழு மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் விசாரணையை தொடங்கினர். காவல்துறையினரின் கூற்றுப்படி, வீட்டில் கொள்ளை அல்லது திருடப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. விசாரணையின் போது முரண்பாடுகள் வெளிப்பட்டதால் அர்ஜுனின் வாக்குமூலம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ச்சியான விசாரணைக்குப் பிறகு, அர்ஜுன் உண்மையை ஒப்புக்கொண்டார். மேலும் தனிப்பட்ட மனக்கசப்புகள் காரணமாக தூண்டப்பட்ட ஒரு திட்டமிட்ட செயலில் தனது குடும்ப உறுப்பினர்களைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார் எனபோலீசார் தெரிவித்தனர்.
ஸ்ட்ரிக்டான அப்பா, சகோதரி பெயரில் சொத்தை மாற்ற திட்டம் உள்ளிட்டவை கொலை செய்ய தூண்டியுள்ளது
அர்ஜுனின் வாக்குமூலத்தின்படி, அர்ஜுன் தனது தந்தையுடன் ஒரு கசப்பான உறவைக் கொண்டிருந்தார். அவரது அப்பா ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் எனவும், அவர் தினசரி வழக்கங்கள் மற்றும் படிப்புகள் தொடர்பாக அடிக்கடி கண்டித்துள்ளார். மேலும் சமீபத்தில் அவரை பகிரங்கமாக கண்டித்துள்ளார். அதோடு அவரது தந்தை, சகோதரிக்கு சொத்தை மாற்ற திட்டமிட்டுள்ளதை அறிந்த அர்ஜுன் கோபமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். டிசம்பர் 4ஆம் தேதி, அவரது பெற்றோரின் திருமண நாள். அர்ஜுன் வீட்டில் கத்தியைப் பயன்படுத்தி குடும்பத்தினரை தூக்கத்தில் கொன்றுவிட்டு, காலை நடைப்பயணத்திற்குச் சென்று நாடகமாடியுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பிஏ படிக்கும் அர்ஜுன், பயிற்சி பெற்ற குத்துச்சண்டை வீரர் ஆவார், அவர் டெல்லி மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.