கடும் வெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு மத்தியில் டெல்லியில் மின்சாரம் துண்டிப்பு
ஏற்கனவே கடுமையான வெப்பம் மற்றும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையுடன் போராடி வரும் டெல்லியில் இன்று மதியம் பரவலாக மின்வெட்டு ஏற்பட்டது. டெல்லிக்கு 1,500 மெகாவாட் மின்சாரம் வழங்கும் உத்தரபிரதேசத்தின் மண்டோலாவில் உள்ள மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இந்த தடை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை உறுதி செய்த டெல்லி மின்துறை அமைச்சர் அதிஷி, "டெல்லிக்கு 1,500 மெகாவாட் மின்சாரம் வழங்கும் உ.பி.,யின் மண்டோலாவில் உள்ள பவர் கிரிட் தீப்பிடித்துள்ளது." என்று கூறியுள்ளார். டெல்லியின் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் ஆக இருந்த நிலையில், இந்த மின் தடை ஏற்பட்டது.
தேசிய உள்கட்டமைப்பு தோல்வி குறித்து மின்துறை அமைச்சர் கவலை
டெல்லி நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் தொடர்ந்து நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த தீவிரமான வெப்ப அலையானது டெல்லியில் கடந்த ஒரு மாதமாக பரவி வருகிறது. சில நாட்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்ந்ததது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டெல்லி மக்கள் மின்வெட்டு குறித்து சமூக வலைதளங்களில் தங்கள் கவலைகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், தேசிய மின் உள்கட்டமைப்பின் தோல்வி குறித்து அமைச்சர் அதிஷி தனது கவலையை வெளிப்படுத்தினார். இதற்கு பரவலான மின்வெட்டுகளே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.