இன்ஜின் கோளாறு: ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்ட இந்திய விமானம்
புது டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்(ஏஐ173), இன்ஜின் கோளாறு காரணமாக, இன்று ரஷ்யாவின் மகடன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் 216 பயணிகளும் 16 பணியாளர்களும் இருந்தனர். இதனையடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: "டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் AI173இன் இன்ஜின் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதனால், 216 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் பயணித்த அந்த விமானம் ரஷ்யாவில் உள்ள மகடன் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பயணிகளுக்கு அனைத்து ஆதரவும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் விரைவில் மாற்று விமானங்கள் மூலம் அவர்களது இலக்குகளுக்கு அனுப்பப்படுவார்கள்"
ஏர் இந்தியா விமானம் குறித்து வெளியான செய்திகள்
ஏர் இந்தியா விமானம் தொடர்பான பல செய்திகள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது. கடந்த மாதம், டெல்லியில் இருந்து சிட்னிக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்(AI-302) நடு வானில் கடுமையாக குலுங்கியதால், பல பயணிகள் காயம் அடைந்தனர். கடந்த ஏப்ரல் மாதம், விமான பயணி ஒருவர் விமான பணியாளர்களை தாக்கியதை அடுத்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம், விமானத்தின் வால் பகுதியில் அடிபட்டதால், கோழிக்கோடில் இருந்து தம்மம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானம் ஒன்று திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டது. இதனால், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.