225 பயணிகளுடன் ரஷ்யாவிற்கு திருப்பி விடப்பட்ட ஏர் இந்தியா விமானம்; தற்போதைய நிலை என்ன?
நேற்று டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது ரஷ்யாவுக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. விமானிகள் (காக்பிட் குழுவினர்) சரக்குகள் வைத்திருக்கும் பகுதியில் சாத்தியமான சிக்கலைக் கண்டறிந்ததை அடுத்து, AI183 விமானம் ரஷ்யாவின் கிராஸ்நோயார்ஸ்க் பிரதேசத்தில் உள்ள க்ராஸ்நோயார்ஸ்க் சர்வதேச விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறங்கியதாக விமான நிறுவனம் கூறியது. விமானத்தில் 225 பயணிகளும், 19 விமான ஊழியர்களும் இருந்தனர்.
மாற்று விமானத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது
"KJA இல் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் இல்லாததால், பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மூன்றாம் தரப்பு ஆதரவை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்" என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சான் பிரான்சிஸ்கோவிற்கு பயணிகளை விரைவாக அழைத்துச் செல்ல மாற்று விமானத்திற்கான ஏற்பாடுகளை ஏர் இந்தியா செய்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டும், இதே பாதையில் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறுகளால் பாதிக்கப்பட்டு ரஷ்யாவின் தொலைதூர நகரமான மகதானுக்கு திருப்பி விடப்பட்டது. அந்த நேரத்தில் விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்தனர். அதன் பயணிகள் பின்னர் ஒரு பள்ளியில் தற்காலிகமாக இரண்டு நாட்கள் தங்கவைக்கப்பட்டு, மாற்று விமானத்தில் சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்டனர்.