மிகவும் மோசமடைந்தது டெல்லியின் காற்று மாசு
டெல்லியில் காற்றின் தரம் இன்று மிகவும் மோசமடைந்துள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்(CPCB) தரவுகளின் படி, இன்று டெல்லியில் காற்றின் தரக் குறியீடு(AQI) 224ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, டெல்லி காற்றின் தரம் 'மோசம்' என்ற வகைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்று டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 15.8 டிகிரி செல்சியஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், டெல்லி அதன் மிகக் குறைந்த வெப்பநிலையைப் பதிவுசெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழக்கிழமை, டெல்லியின் வெப்பநிலை 15.9 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது தான் இந்த பருவத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை என்றும் இது இயல்பை விட மூன்று டிகிரி குறைவானது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்திருந்தது.
இந்தியாவிலேயே அதிக மாசுபட்ட நகரம் டெல்லியாகும்
இதனிடையே, தேசிய தலைநகர் மண்டலம்(NCR) முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கும், டீசல் பேருந்துகளை இயக்குவதற்கும் முழுத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் டெல்லி-அரசு வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுடன் நேற்று நடைபெற்ற மாநிலங்களின் கூட்டுக் கூட்டத்தில் இந்த கோரிக்கையை டெல்லி அரசு முன்வைத்துள்ளது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான சுயாதீன சுற்றுச்சூழல் சிந்தனைக் குழுவின்(CSE) அறிக்கையின்படி, டெல்லியின் 31 சதவீத மாசு தேசிய தலைநகரில் உள்ள மூலங்களிலிருந்து உருவாகிறது. அதே நேரத்தில் 69 சதவீத மாசு NCR மாநிலங்களில் இருந்து உருவாகிறது. எனவே, முதலில் NCRரில் மாசுபாட்டை குறைக்க அரசு முயற்சித்து வருகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்(CPCB) நடத்திய ஆய்வின்படி, இந்தியாவிலேயே அதிக மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது.