டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால், தொடக்கப் பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளித்து ஆம் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரம், கடுமையான வகைக்கு வீழ்ந்துள்ளது. டெல்லியின் முக்கிய பகுதிகளான லோதி சாலை பகுதியில் 438, ஜஹாங்கிர்புரி பகுதியில் 491 , ஆர்கே புரம் பகுதியில் 486, விமான நிலையத்தைச் சுற்றி 473 ஆக காற்றின் தரக்குறியீடு உள்ளது.
கார்கள், கட்டுமான நடவடிக்கைகளுக்கு தடை
அதிகரித்து வரும் காற்று மாசு கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பிஎஸ் 3 மற்றும் பிஎஸ் 4 டீசல் கார்களை டெல்லி குருகிராம், ஃபரிதாபாத், காசியாபாத், கௌதம் புத் நகர் பகுதிகளில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியம் இல்லாத கட்டுமான நடவடிக்கைகள், கட்டிட இடிப்பு, செப்பனிடப்படாத சாலைகளில் வாகனங்களின் இயக்கம், கழிவுநீர் பாதை அமைத்தல், குடிநீர் பைப் லைன் அமைத்தல், வடிகால் வேலை மற்றும் திறந்த அகழி அமைப்பு மூலம் மின்சார கேபிள் அமைத்தல், பெயிண்டிங், மெருகூட்டல் மற்றும் வார்னிஷ் வேலைகள் போன்றவை மற்றும் சாலை கட்டுமானம்/பழுதுபார்க்கும் பணிகள், நடைபாதைகள்/பாதைகள் போன்றவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கார்களில் பயணிப்பதை தவிர்க்க, கூடுதலாக 20 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது.
டெல்லியில் காற்று மோசம் அடைய காரணம் என்ன?
வழக்கமாகவே டெல்லியின் காற்று மாசு அளவுகள் நவம்பர் 1 முதல் 15ஆம் தேதி வரை, அன்றை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாபில் எரியூட்டப்படும் விவசாய கழிவுகளால் அதிகரிக்கின்றன. பல்வேறு சலுகைகள் மூலம் அரசுகள் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதை கட்டுப்படுத்தி வந்தாலும், கடந்த சில நாட்களாக இது அதிகரித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் போதிய அளவு மழை இல்லாததும் டெல்லியின் மோசமான காற்று மாசுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
காற்றின் தரக் குறியீடு(AQI) என்றால் என்ன?
காற்றிலுள்ள மாசு பொருட்களின் அளவைப் பொறுத்து, காற்றின் தரக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த குறியீடு எவ்வளவு குறைவாக உள்ளதோ, காற்று அவ்வளவு நன்றாக உள்ளதாக பொருள். பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட AQI நல்லதாகவும், 51 மற்றும் 100 திருப்திகரமாகவும், 101 மற்றும் 200 மிதமானதாகவும், 201 மற்றும் 300 மோசமானதாகவும், 301 மற்றும் 400 மிகவும் மோசமானதாகவும், 401 மற்றும் 500 கடுமையான மற்றும் 500க்கு மேல் இருந்தால், அது அபாயகரமானதாகவும் கருதப்படுகிறது. டெல்லியின் காற்று தரக்குறியீடு ஏற்கனவே மோசமாக உள்ள நிலையில், இது மேலும் மோசம் அடையலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.