காவல்துறை அதிகாரியிடமே ரூ.2 லட்சத்தை மோசடி செய்த ஆன்லைன் மோசடி கும்பல்!
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், அதனைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடிச் செயல்களும் அதிகரித்து வருகின்றன. பல்வேறு வகைகளில் தினமும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகிறது. தற்போது டெல்லியைச் சேர்ந்த காவல்துறை துணை உதவி ஆய்வாளர் ஒருவரே இந்த ஆன்லைன மோசடி சம்பவத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியின் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த துணை உதவி ஆய்வாளர் வினோத் தியாகி. இவர் மேற்கொண்ட போன்பே பரிவர்த்தனை ஒன்றிற்காக கேஷ்பேக் வழங்குகிறோம் எனக் கூறி இவரைத் நேரடி மொபைல் அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டிருக்கின்றனர் மோசடி நபர்கள். இந்த கேஷ்பேக்கைப் பெற ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை அவருடைய ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றனர்.
புதிய முறையில் ஆன்லைன் மோசடி
மோசடி நபர்கள் வலையில் சிக்கிய காவல் ஆய்வாளர் அந்த செயலியை தன்னுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஆய்வாளரின் ஸ்மார்ட்போனின் இயக்கம் மோசடி நபர்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றிருக்கிறது. ஸ்மார்ட்போன் மூலம் அவரது வங்கிக் கணக்கு மற்றும் கிரெடிட் கார்டில் இருந்து சுமார் ரூ.2,12,000 ரூபாயை வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றியிருக்கின்றனர். இதன் பிறகே தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் வினோத் தியாகி. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு அந்தப் பணம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல வங்கி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.