Page Loader
டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை 
நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள புலந்த்ஷாஹரில் வைத்து சாஹில் கைது செய்யப்பட்டார்.

டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
May 30, 2023
02:18 pm

செய்தி முன்னோட்டம்

வடமேற்கு டெல்லியில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட பதின் வயது பெண்ணின் பெற்றோர், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். உயிரிழந்த சாக்ஷியும்(16) அவரது கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாஹிலும்(20) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சாக்ஷிக்கும் சாஹிலுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு பரிசு பொருட்கள் வாங்க சாக்ஷி கடைக்குச் சென்றிருந்தார். அப்போது, அவரை மடக்கி பிடித்த சாஹில் ​​மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு இடத்தில் வைத்து சாக்ஷியை தாக்கினார். இந்த சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட 90 வினாடி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Details

குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டும்: சாக்ஷியின் பெற்றோர்

சாஹில் ஒரு கையால் சாக்ஷியை சுவரோடு பிடித்து கொண்டு, மறு கையால் அவரை கத்தியால் குத்துவது அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இதெல்லாம் ஷஹபாத் டெய்ரி பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான தெருவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலினால் சாக்ஷி மயக்கமடைந்து கீழே விழுந்த பிறகும், சாஹில் தனது தாக்குதலை நிறுத்தவில்லை. சாஹில் சாக்ஷியை 20 முறை கத்தியால் குத்தியது மட்டுமல்லாமல், அவரை உதைத்தும், சிமென்ட் பலகையால் தாக்கியும் சித்தரவதை செய்தார். இதனையடுத்து, நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள புலந்த்ஷாஹரில் வைத்து சாஹில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், "எங்கள் மகளுக்கு நீதி வேண்டும். அவள் கொடூரமாக பலமுறை குத்தி கொல்லப்பட்டாள். குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டும்." என்று சாக்ஷியின் பெற்றோர் கூறியுள்ளனர்.