டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து: மூச்சுத் திணறி ஒருவர் பலி
டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திணறி ஒருவர் உயிரிழந்தார். 46 வயதான, அலுவலக கண்காணிப்பாளர் ஒருவர், சம்பவ இடத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இன்று மதியம் 2.38 மணிக்கு வந்த அழைப்பின் பேரில் பத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அதன் பிறகு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த கட்டிடம் பழைய போலீஸ் தலைமையகத்திற்கு எதிரே அமைந்துள்ளது. பழைய போலீஸ் தலைமையகத்தில் இன்னும் சில பிரிவுகள் பணி புரிந்து வருகின்றன.