முதியோர் ஓய்வூதியம் பெறுவவதை எளிதாக்க ஆன்லைன் போர்ட்டல் தொடங்கியது டெல்லி அரசு
டெல்லி அரசு தனது முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை எளிதாக்க பிரத்யேக ஆன்லைன் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே 10,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 80,000 நபர்கள் தற்போது இத்திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்த முயற்சி தேவைப்படும் மூத்த குடிமக்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திட்டத்தின் கீழ் 60-69 வயதுடைய நபர்கள் மாதம் ₹2,000 பெறுவார்கள். 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களும், 60-69 வயதுடைய எஸ்சி/எஸ்டி/சிறுபான்மைப் பயனாளிகளும் மாதம் ₹2,500 பெறுவார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 5,000 ரூபாய் ஓய்வூதியத்தை நீட்டிக்கும் திட்டம் நடந்து வருகிறது என்று அமைச்சர் சௌரப் பரத்வாஜ் தெரிவித்தார்.
பென்சன் திட்ட தகுதிக்கான அளவுகோல்கள்
விண்ணப்பதாரர்களுக்கு கண்டிப்பாக குறைந்தது 60 வயது இருக்க வேண்டும். டெல்லியில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ₹1,00,000க்குக் குறைவாக இருக்க வேண்டும். டெல்லியில் ஆதார் இணைக்கப்பட்ட, தனியாக இயக்கப்படும் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். மற்ற அரசு திட்டங்களின் கீழ் இதே போன்ற பலன்களைப் பெற்றிருக்கக் கூடாது. தகுதியான விண்ணப்பதாரர்கள் www.edistrict.delhigovt.nic.in வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது அவர்களின் உள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் உதவியை நாடலாம். வயதுச் சான்று, வசிப்பிடச் சான்று, வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பொருந்தக்கூடிய இடங்களில் சாதி அல்லது சிறுபான்மைச் சரிபார்ப்பு போன்ற ஆவணங்கள் தேவையாகும்.