Page Loader
டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 மூடப்பட்டதால் 22,000 பயணிகள் பாதிப்பு 

டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 மூடப்பட்டதால் 22,000 பயணிகள் பாதிப்பு 

எழுதியவர் Sindhuja SM
Jul 01, 2024
12:20 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அந்த விமான நிலையத்தின் டெர்மினல்-1 (டி1) கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மூடப்பட்டது. இதனால், சுமார் 22,615 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் முன்பதிவு செய்த ஏறக்குறைய 10,000 பயணிகளுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 196 பயணிகளுக்கு பணத்தைத் திரும்ப வழங்கும் செயல்முறை இன்னும் நடந்து வருகிறது. மேற்கூரை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, டெர்மினல் 1இன் விமானச் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. டெர்மினல் 1இன் விமானங்கள் அனைத்தும் உடனடியாக டெர்மினல்-2 மற்றும் டெர்மினல்-3க்கு மாற்றப்பட்டதால், வார இறுதியில் எந்த விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை.

டெல்லி 

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு 

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு விமான நிலைய செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்தார். மேலும், அவர், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பிசிஏஎஸ்), டெல்லி சர்வதேச விமான நிலையம் லிமிடெட் (டிஐஏஎல்) மற்றும் விமான நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பயணிகளை கையாளுதல் மற்றும் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த வெள்ளியன்று பெய்த கனமழையால் T1 புறப்படும் பகுதியின் கூரை இடிந்து விழுந்ததை அடுத்து இந்த மதிப்பாய்வு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் கால்டாக்சி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர்.