'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்
'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு விசாரணைக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் ஜூலை 14ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி 'திமுக ஃபைல்ஸ்' என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக தலைவர்களின் சொத்து மதிப்புகளின் பட்டியலை வெளியிட்டார். இதனால் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவின் சொத்து மதிப்பு ரூ.10,841 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த டி.ஆர்.பாலு, 48 மணிநேரத்திற்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் ரூ.100 கோடி இழப்பீடு வழஙக வேண்டும் என்று அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அண்ணாமலை வெளியிட்ட தகவல்கள் பொய்யானவை: டி.ஆர்.பாலு
இதற்கு பதில் நோட்டீஸ் அனுப்பிய அண்ணாமலை, "டி.ஆர்.பாலு குறித்து எந்த விதமான அவதூறும் பரப்படவில்லை. வெளியிடப்பட்ட சொத்து மதிப்புகள் உண்மையானவை.இந்த சொத்து குவிப்பு குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் அந்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதனால், மன்னிப்பும் கேட்க முடியாது. ரூ.100 கோடி இழப்பீடும் வழங்க முடியாது" என்று கூறி இருந்தார். இதனையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர்.பாலு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "அண்ணாமலை வெளியிட்ட தகவல்கள் பொய்யானவை. அது என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. எனவே, அவதூறு சட்டத்தின் கீழ் அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறப்பட்டிருந்து. இந்த மனுவை இன்று விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியுள்ளது.