கர்நாடக தேர்தல்: ஜனதா தளத்தை தொடர்புகொண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக
கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கணித்திருப்பதால், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தங்களை தொடர்புகொண்டதாக எச்.டி.குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூறியுள்ளது. குமாரசாமி தற்போது சிங்கப்பூரில் இருக்கிறார். இந்நிலையில், யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து "முடிவு செய்யப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் அதை பொதுமக்களுக்கு அறிவிப்போம்" என்று ஜேடி(எஸ்) தலைவர் தன்வீர்-அகமது NDTVக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை தொடர்பு கொள்ளவில்லை என்று பாஜக மறுத்துள்ளது. NDTVக்கு அளித்த பேட்டியில், பாஜகவின் ஷோபா கரந்த்லாஜே, "கூட்டணி என்ற கேள்வியே இல்லை. பாஜக ஜேடி(எஸ்)-ஐ தொடர்பு கொள்ளவில்லை" என்று கூறியுள்ளார்.
120 இடங்களில் பாஜக வெற்றி பெறும்: பாஜக தலைவர்
மேலும், 120 இடங்களை பாஜக பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். "ஆம், இரு கட்சிகளும் (பாஜக மற்றும் காங்கிரஸ்) எங்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளன... கட்சிகள் எங்களைத் தொடர்பு கொள்ள விரும்பும் நிலையில் ஜேடி(எஸ்) கட்சி உள்ளது" என்று தன்வீர் அகமது கூறினார். "கர்நாடக மக்கள், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக இரு தேசியக் கட்சிகளையும் நாங்கள் கண்காணிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும் ஒரு பிராந்தியக் கட்சி கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக உழைக்க விரும்பாததற்கு எந்தக் காரணமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை," என்று அவர் மேலும் கூறினார். எந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று கேட்டதற்கு, "கர்நாடகம் மற்றும் கன்னடர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடப் போகிற கட்சிக்கு" என்று அவர் பதிலளித்துள்ளார்.