
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்பத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரியின் நிர்வாக ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டத்தினை மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கல்வியாண்டிற்கான கலந்தாய்வு விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 28ம் தேதி ஆன்லைனில் துவங்கியது.
அதன்படி இந்த விண்ணப்பத்தினை ஜூலை 10ம் தேதி மாலை 5 மணிவரை மட்டும் தான் பதிவு செய்ய முடியும் என்றும் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் முன்னதாக தெரிவித்திருந்தது.
கால அவகாசம்
ஜூலை 12ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம்
இந்நிலையில் தற்போது எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தினை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், "வரும் ஜூலை 12ம் தேதி மாலை 5 மணி வரை இந்த மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பத்தினை www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org உள்ளிட்ட இணையத்தளங்களில் விண்ணப்பிக்கலாம்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, இந்த கல்வியாண்டு முதல் 'நெக்ஸ்ட்' என்னும் தகுதி தேர்வினை எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு அமல்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தேர்வானது இரு தேர்வுகளாக மே மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.