தமிழ்த்தாய் வாழ்த்தில் குளறுபடி; மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது டிடி தமிழ்
செய்தி முன்னோட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல் இடம்பெறும் வரி புறக்கணிக்கப்பட்டதாக கூறி சர்ச்சை வெடித்தது.
டிடி தமிழ் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) சென்னையில் நடத்திய இந்திய தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை பாடும்போது சரியாக பாடவில்லை.
இதுதொடர்பான காணொளி வெளியாகிய நிலையில், ஆளுநருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து டிடி தமிழ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார் எனத் தெரிவித்துள்ளது.
மன்னிப்பு
மன்னிப்பு கேட்ட டிடி தமிழ்
மேலும், கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ள டிடி தமிழ், தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை என்றும், வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளது.
மேலும், இது தொடர்பாக, தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழக ஆளுநரின் ஆலோசகர் திருஞானசம்பந்தம், தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடியில், ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை என்றும், தமிழ் மற்றும் தமிழ் உணர்வு மீது ஆளுநருக்கு அதீத மரியாதை உண்டு எனக் கூறியுள்ளார்.
மேலும், இந்த குளறுபடி குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
ஆளுநரின் ஆலோசகர் விளக்கம்
#BREAKING | தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடியில் ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ தொடர்பில்லை
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 18, 2024
- ஆளுநர் ஆலோசகர் விளக்கம் #TNGovernor | #GovernorRNRavi | #TamilNadu | | #ThamizhThaaiVaazhthu | #தமிழ்த்தாய்வாழ்த்து pic.twitter.com/MNtMY6mBDE