Loading...
தீவிரப் புயலாக வலுவடைந்தது 'முரசு': சென்னையில் விடிய விடிய கனமழை; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.

தீவிரப் புயலாக வலுவடைந்தது 'முரசு': சென்னையில் விடிய விடிய கனமழை; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 02, 2026
08:41 am

செய்தி முன்னோட்டம்

தென்மேற்கு மற்றும் மேற்கு-மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த முரசு புயல் தீவிரப் புயலாக வலுவடைந்து, மணிக்கு 20 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இரவு முழுவதும் பல இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. முரசு புயல் சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே 260 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு கிழக்கே-தென்கிழக்கே 290 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு 11:30 மணி முதல் நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்குள் ஆந்திர மாநிலம் நெல்லூர் - நரசப்பூர் இடையே தீவிரப் புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை

சென்னையில் விடிய விடிய கனமழை

புயலின் வெளிச்சுற்று பகுதிகள் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பதிவாகியுள்ளது.

கிண்டி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவொற்றியூர், மணலி மற்றும் எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

எண்ணூர்: 10 செ.மீ (அதிகபட்ச மழைப்பதிவு)

நுங்கம்பாக்கம்: 8.7 செ.மீ

விருதுநகர்: 8.5 செ.மீ

விடுமுறை

சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலெர்ட்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை மற்றும் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 2) ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் வங்கக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனப் பேரிடர் மேலாண்மைத் துறை கடுமையாக எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT