இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை: இன்று என்னென்ன சேவைகள் இயங்கும்?
வங்கக்கடலில் நிலவி வந்த மிஜாம் புயல், இன்னும் சிறிது நேரத்தில் ஆந்திர கடற்கரையில் உள்ள பாபட்லா அருகே தீவிர புயலாக கரையை கடக்க உள்ளதால், சென்னையில் மழை குறைந்துவிட்டது. ஆனால், நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் நிரம்பியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மழையால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் 29 செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 28 செ.மீ மழையும், செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் 22 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இன்று என்னென்ன சேவைகள் இயங்கும்?
சென்னை விமான நிலையத்தின் ஓடு பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், இன்று காலை 9 மணி வரை விமான நிலையம் இயங்காது என்று அறிவிக்கப்ட்டுள்ளது. மழை மற்றும் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இராணிபேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று ஞாயிற்று கிழமை அட்டவணையை பின்பற்றி காலை 5 மணி முதல் 11 மணி வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இன்றும் இயங்காது.
தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணிகள்
மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மேற்பார்வையில் 8,590 மின் வாரிய ஊழியர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் எட்டு இடங்களில் மொத்தம் 236 நிவாரண முகாம்களை அமைத்து, இன்றுவரை 9,634 பேருக்கு உணவு, தண்ணீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளை வழங்கி வருவதாக தமிழக அரசு கூறியுள்ளது. நேற்று தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதல்வர்களை தொடர்புகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புயலில் இருந்து மீள மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.