மிக்ஜாம் புயல்: ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய திமுக எம்பிக்கள்
கடந்த மாத இறுதியில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், இந்த மாத தொடக்கத்தில் வட தமிழக கரையோர மாவட்டங்களுக்கு வரலாறு காணாத மழை பொழிவை வழங்கியது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னையின் பெரும்பான்மையான பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கிய நிலையில், குறைந்தது 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், தலைநகரில் மட்டும் ₹2,000 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரிடர் நிவாரப் பணிகளுக்காக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக முதல்வர் அறிவித்ததுடன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நிதி வழங்க கேட்டுக்கொண்டார்.
முதல்வர் நிவாரண நிதிக்கு 30 எம்பிக்கள் நிதியளிப்பு
இதன் விளைவாக, திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 30 பேர், தங்கள் ஒரு மாத ஊதியத்தை காசோலையாக முதல்வரின் பேரிடர் மேலாண்மை நிதிக்காக வழங்கினர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, எம்பிக்கள் நிதியளித்தனர். மக்களவை எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும், மாநிலங்களவை எம்பிக்கள் திருச்சி சிவா, என்ஆர் இளங்கோ, வில்சன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். முன்னதாக, இயக்குனர் அமீர், நடிகர் வடிவேலு உள்ளிட்ட திரை பிரபலங்களும், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பெருநிறுவனங்களும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, நிதியளித்து வருவது குறிப்பிடத்தக்கது.