பிபர்ஜாய் புயல் கரையை கடப்பதில் தாமதம்: வானிலை அப்டேட்
காற்றின் வேகம் குறைந்துள்ளதால் பிபர்ஜாய் புயல் இன்று குஜராத் கடற்கரையை தாமதமாக கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காற்றின் வேகம் குறைந்துள்ளதால் இன்று இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் பிபர்ஜாய் புயல் கரையை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 115-125 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். "புயலின் வேகம் மட்டுமே குறைந்துள்ளது. நெருக்கடி இன்னும் விலகாததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாகம் கண்காணித்து வருகிறது." என்று குஜராத் அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் படி, இன்று இரவு 8 மணியளவில் பிபர்ஜாய் புயல் குஜராத் கடற்கரையை நெருங்க தொடங்கும்.
அடுத்த 3 மணிநேரத்திற்கு குஜராத்தில் மழை கொட்டும்: வானிலை எச்சரிக்கை
புயல் கரையை கடக்க சில மணிநேரங்கள் ஆகலாம். இது நள்ளிரவு வரை கூட தொடரலாம் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் இடம் ஒரே மாதிரியான நிலப்பராக இல்லாமல், வளைகுடா போல் இருப்பதால், இந்த புயல் கரையை கடக்க சில மணிநேரம் ஆகும். மேலும், அடுத்த 3 மணி நேரத்திற்கு குஜராத் மாநிலத்தின் துவாரகா, ஜாம்நகர், போர்பந்தர், மோர்பி, ராஜ்கோட், ஜுனாகத், அம்ரேலி, பாவ்நகர், கிர், சோம்நாத் மற்றும் கட்ச் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்(மணிக்கு 40 கி.மீ வேகத்தில்) கூடிய மிதமான(5-15 மிமீ/மணி) மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.