வங்கக்கடலில் உருவானது 'அர்னாப்' புயல்: சென்னைக்கு மழை வாய்ப்பு எப்படி? தென் மாவட்ட மக்களுக்கு வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, 'அர்னாப்' புயலாக வலுப்பெற்று வருகிறது. இது அக்டோபர் 28-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையிலான கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. புயல் ஆந்திரக் கடலோரப் பகுதியை நோக்கி நகர்வதால், அது தமிழகத்தை தாக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இருப்பினும், இதன் காரணமாக உருவாகும் வளிமண்டல சுழற்சியால் தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழையின் தாக்கம்
சென்னை மற்றும் வடதமிழகத்தில் மழையின் தாக்கம் குறையுமா?
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள வடதமிழகப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், புயல் ஆந்திரா நோக்கி நகர்வதால் அக்டோபர் 26-ஆம் தேதிக்கு பிறகு சென்னையில் மழையின் அளவு படிப்படியாகக் குறையக்கூடும்.
சென்னையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாகவும், நவம்பர் 2-ஆம் தேதி வரை வடதமிழகத்தில் குறிப்பிடத்தக்க பெரிய மழைக்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகவும் வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.