தனியார் நிறுவனங்களையும் குறிவைக்கும் சைபர் கும்பல்: சென்னையில் 55 நிமிடங்களில் ரூ.1.03 கோடி மோசடி
செய்தி முன்னோட்டம்
சென்னை பெருங்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து, வெறும் 55 நிமிடங்களில் 24 முறை சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனை செய்து ரூ. 1 கோடியே 3 லட்சத்து 76 ஆயிரத்து 860-ஐ சைபர் மோசடி கும்பல் அபகரித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருங்குடியில் 'பல்க்பே' (Bulkpe) என்ற பெயரில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை தளத்தை நடத்தி வரும் இந்நிறுவனத்தின் இயக்குநர் சத்திய நாராயணன், இதுகுறித்துச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சைபர் கிரைம்
அரசுத் துறையைத் தொடர்ந்து ஐடி நிறுவனத்திலும் ஊடுருவல்
கடந்த நவம்பர் 9-ஆம் தேதி காலை 11.01 முதல் 11.55 மணி வரையிலான 55 நிமிடங்களில், தனியார் ஐடி நிறுவனத்தின் யெஸ் வங்கி கணக்கிலிருந்து 24 பரிவர்த்தனைகள் மூலம் மர்ம நபர்கள் ரூ. 1.03 கோடியைச் சுருட்டியுள்ளனர்.
பாதுகாப்புச் சான்றிதழ்களை மீறி நிறுவனத்திற்குத் தெரியாமலேயே நடந்த இந்த ஊடுருவல் நவம்பர் 12-ஆம் தேதி வங்கி ஆய்வில்தான் தெரியவந்தது.
அரசுத் துறையில் ரூ. 22.30 கோடி மோசடி நடந்த பரபரப்பு அடங்குவதற்குள் தனியார் நிறுவனத்திலும் கைவரிசை காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை சைபர் கிரைம் போலீசார், பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கித் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.