Loading...
சென்னையில் பார்க்கிங் விதிமீறல்களை கண்காணிக்க 'Edge AI' தொழில்நுட்பம்: தானியங்கி இ-சலான் அபராதம்
சென்னையில் பார்க்கிங் விதிமீறல்களை கண்காணிக்க 'Edge AI' தொழில்நுட்பம்

சென்னையில் பார்க்கிங் விதிமீறல்களை கண்காணிக்க 'Edge AI' தொழில்நுட்பம்: தானியங்கி இ-சலான் அபராதம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2026
04:01 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் முறையற்ற வாகன நிறுத்தங்களை கட்டுப்படுத்த, பெருநகர சென்னை போக்குவரத்து ஆணையம் அதிநவீன 'Edge AI' தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் மென்பொருளை ஒருங்கிணைக்க இன்று டெண்டர் கோரப்பட்டுள்ளது. தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்க நவம்பர் 27 கடைசி நாளாகும். ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு, சென்னையின் முக்கிய வணிகப் பகுதிகள் மற்றும் நெரிசல் மிகுந்த சாலைகளில் இத்திட்டம் படிப்படியாக நடைமுறைக்கு வரவுள்ளது.

முக்கிய அம்சங்கள்

Edge AI பார்க்கிங் கண்காணிப்புத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் போக்குவரத்து காவலர்களின் நேரடித் தலையீடின்றியே பார்க்கிங் விதிமீறல்கள் துல்லியமாகக் கண்காணிக்கப்படும்.

நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவது, சாலையில் இரட்டை வரிசையில் (Double parking) நிறுத்துவது மற்றும் No Parking பகுதிகளில் நிறுத்தப்படும் கார், பைக், ஆட்டோக்களை இந்த ஏ.ஐ கேமராக்கள் தானாகவே கண்டறியும்

விதிமீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை கேமரா ஸ்கேன் செய்து, விதிமீறல் நடந்த நேரத்தை துல்லியமாகப் புகைப்பட ஆதாரத்துடன் பதிவு செய்யும்.

இந்தத் தரவுகள் போக்குவரத்து காவல்துறையின் சர்வருடன் இணைக்கப்பட்டு, வாகன உரிமையாளரின் மொபைல் எண்ணிற்கு இ-சலான் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

கேமராவில் பதிவாகும் காட்சிகள் உடனுக்குடன் அங்கேயே பகுப்பாய்வு செய்யப்படுவதால், இணைய வேகம் குறைவாக இருந்தாலும் தாமதமின்றி விதிமீறல்கள் கண்டறியப்படும்.

அபராத விதிகள்

சென்னையில் பார்க்கிங் விதிமீறல்களுக்கான அபராத விதிகள் என்ன?

மத்திய மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விதிகளின்படி, தவறான பார்க்கிங்கிற்கு விதிக்கப்படும் அபராத விவரங்கள்:

நோ பார்க்கிங் அபராதம்: அனுமதியற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தினால் முதல் முறை ₹500 அபராதம் விதிக்கப்படும்.

போக்குவரத்திற்கு இடையூறு செய்தல்: நடைபாதைகள், பேருந்து நிறுத்தங்கள் அல்லது சாலையின் நடுவே போக்குவரத்தைத் தடுக்கும் வகையில் வாகனங்களை நிறுத்தினால், அபராதத்துடன் சேர்த்து வாகனத்தைத் தூக்கிச் செல்லும் கட்டணமும் வசூலிக்கப்படும்.

ஆன்லைன் கட்டணம்: மொபைல் எண்ணிற்கு வரும் இ-சலான் அபராதத் தொகையை வாகன உரிமையாளர்கள் Parivahan இணையதளம் மூலம் ஆன்லைனிலேயே செலுத்தலாம்.

ADVERTISEMENT