திருப்பதி மலையேறும் பக்தர்களுக்கு இனி கைத்தடி வழங்கப்படும் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி அலிப்பிரி மலைப்பகுதியில் அண்மையில் குடும்பத்தோடு நடந்து சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்து சென்று கடித்து கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியது. இதனையடுத்து அந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறிது நேரத்திலேயே வேறு ஒரு சிறுத்தை அதே பகுதிக்கு வந்ததை கண்டு அங்கிருந்த பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து சிறுத்தையினை விரட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தினை தடுக்க திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை இணைந்து பல விதிமுறைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
12 வயத்துக்குட்பட்டோர் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே மலையேற அனுமதி
இதனிடையே திருப்பதி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக திரிந்த சிறுத்தை, மலையின் கீழே இறங்கி மலையடிவாரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் புகுந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் மலையேறும் பக்தர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கைத்தடி வழங்கப்படும் என்னும் அறிவிப்பினை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன்படி திருப்பதி அலிப்பிரி வழியே மலையேறும் பக்தர்களுக்கு தேவஸ்தான பாதுகாவலர்கள் இன்று(ஆகஸ்ட்.,16) கைத்தடி வழங்கி, இத்திட்டத்தினை துவக்கி வைத்துள்ளனர். இந்த கைத்தடிகள் கோயில் அருகே சென்றதும் மீண்டும் சேகரித்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் 12 வயத்துக்குட்பட்டோர் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே மலைப்பாதையில் ஏற அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.