புதிய கொரோனா மாறுபாடு 'ஆர்க்டரஸ்': நோய்தொற்றின் அறிகுறிகள் பற்றிய தகவல்
'ஆர்க்டரஸ்' என்ற கொரோனா மாறுபாட்டை உலக சுகாதார அமைப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஓமிக்ரான் பரவலில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இந்த புதிய வைரஸ், குழந்தைகளுக்கு பரவும் போது ஒரு புதிய அறிகுறியை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆர்க்டரஸ் என்றும் அழைக்கப்படும் ஓமிக்ரான் துணை வகை XBB.1.16, இந்தியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் அதிக கொரோனா பரவலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த வகை கொரோனாவால் சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தொற்றுநோயின் பரவல் அதிகரித்து வருகிறது. XBB.1.16 துணை மாறுபாடு என்பது ஓமிக்ரான் மாறுபாட்டின் இரண்டு துணை வகைகளின் கலவையாகும். XBB.1 மற்றும் XBB.1.5 வகை கொரோனவை விட XBB.1.16 கொரோனா, அதிக திறன் கொண்டதாக இருக்கும் என்று டோக்கியோ பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.
அதிகமாக பரவ கூடிய கொரோனா வகை
இந்த வகை கொரோனாவால் அதிக காய்ச்சல், இருமல், அரிப்பு வெண்படல அழற்சி, சீழ் இல்லாமல் சிவக்கும் கண்கள் போன்ற அறிகுறிகள் குழந்தைகளுக்கு ஏற்படுவதாக இந்திய குழந்தை மருத்துவக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் விபின் எம்.வசிஷ்தா கூறியுள்ளார். முந்தைய கொரோனா அலைகளில் இது போன்ற அறிகுறிகள் இருந்ததில்லை என்றும் அவர் கூறினார். பெரியவர்களுக்கு காய்ச்சல், சளி, தொண்டை புண் போன்ற அறிகுறிகள் இந்த கொரோனா வகையால் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், கண்களில் அழற்சி ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வகைகளிலேயே இந்த கொரோனா வகை தான் அதிகமாக பரவ கூடியது என்று WHOவின் கோவிட் தொழில்நுட்பத் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார்.