மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; வெல்லப்போவது யார்?
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவம்பர் 23) காலை 8:00 மணிக்கு தொடங்கியது. 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதியும், ஜார்க்கண்டில் 81 சட்டமன்றத் தொகுதிகளில் நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில், அரசியல் போட்டி முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி (பாஜக), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அடங்கிய ஆளும் மஹாயுதி கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணியாக மகா விகாஸ் அகாதிக்கு இடையே முதன்மையான போட்டி நிலவுகிறது. மகா விகாஸ் அகாதி உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் என்சிபி மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
தேர்தல் வெற்றி கணிப்புகள்
ஜார்க்கண்டில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான கூட்டணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இடையே முதன்மை போட்டி நிலவுகிறது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணிக்கு சற்று முன்னிலையுடன் நெருக்கமான போட்டியைக் காட்டுகின்றன. எவ்வாறாயினும், சி-வோட்டர், பி-மார்க், டைனிக் பாஸ்கர் மற்றும் லோக்ஷாஹி மராத்தி-ருத்ரா ஆகிய நான்கு முக்கிய கருத்துக் கணிப்புகள், மகாயுதி அல்லது மகா விகாஸ் அகாதி ஆகிய இரு கூட்டணிகளும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற வாய்ப்பில்லை என்றும் தொங்கு சட்டசபை உருவாகலாம் என்றும் கணித்துள்ளது. ஜார்க்கண்டில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. இருப்பினும், ஒரு கருத்துக்கணிப்பு ஜேஎம்எம் கூட்டணிக்கு சாத்தியமான வெற்றியைக் குறிக்கிறது.
2024 இடைத்தேர்தல் முடிவுகள்
இரு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கையுடன், இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனுடன் பிரியங்கா காந்தி வதேரா போட்டியிடும் கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நான்டெட் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில், அங்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.