மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து, குகி பழங்குடியின மக்கள் போராட்டத்தினை துவங்கியதையடுத்து, கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து கலவரம் நடந்து வருகிறது. கடந்த மே மாதம் 4ம்தேதி குகி பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் காங்போக்பி மாவட்டம், பி பைனோம் என்னும் கிராமத்திற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கலவரக்காரர்கள், அந்த கிராமத்திற்கு தீவைக்க முயற்சித்துள்ளனர். அப்போது உயிரை காப்பாற்றிக்கொள்ள அப்பகுதி மக்கள் சிதறி ஓடியுள்ளனர். அதில் 3 பெண்களை பிடித்த கலவரக்காரர்கள் அவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் அழைத்து சென்றுள்ளனர். 20, 40 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க அந்த 3 பெண்களுள் இளம்வயதான பெண்ணினை மானப்பங்கம் செய்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் பேட்டி
இதனை தடுக்க முயன்ற அப்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்நிலையில், பெண்களை நிர்வாணப்படுத்திய வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, கடந்த 18ம்தேதி பூஜ்யம் என்னும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பூஜ்யம் என்றால் அதிகார வரம்பின்றி எந்த காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்வதாகும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட இளம்பெண் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அதில், "வன்முறையினை கண்டு பயந்து ஓடிய எங்களை, தவுபால் காவல்நிலையத்தினை சேர்ந்த காவலர்கள்தான் மீட்டனர். ஆனால் காவல் நிலையத்திற்கு செல்லும் இடையிலேயே மீண்டும் கலவரக்காரர்கள் எங்களை பிடித்துக்கொண்டனர்" என்றும், "அப்போது காவல்துறையினர் தங்களை கலவரக்காரர்களிடம் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்" என்றும் தெரிவித்துள்ளார்.