
'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
இந்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகமானது அமேசான், பிக் பாஸ்கட் மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது பயனர்களை ஏமாற்றும் வகையில் 'டார்க் பேட்டர்ன்களை' (Dark Patterns) தங்கள் வலைத்தளங்களில் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் அறிவித்திருக்கிறது.
இது குறித்து நுகர்வோர் நலத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "கடந்த ஜூன் 13-ம் தேதியே டார்க் பேட்டர்ன்களைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு, அதனைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்தோம்".
"டார்க் பேட்டர்ன்களை பயன்படுத்தினால், அந்நிறுவனங்களின் மீது கண்டிப்பான நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் ஜூன் 28-ம் தேதியன்று நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.
வணிகம்
டார்க் பேட்டர்ன்கள் என்றால் என்ன?
நாம் தினமும் பயன்படுத்தும் வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் மூலம், ஒரு குறிப்பிட்ட பொருள் வாங்க வைக்கவோ அல்லது குறிப்பிட்ட சேவையை நம்மை பயன்படுத்த வைக்கவோ நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு முறையே டார்க் பேட்டர்ன்ஸ்.
உதாரணத்திற்கு, ஆன்லைன் வணிகத் தளங்களை எடுத்துக் கொள்வோம். அதில் நாம் வாங்க விரும்பும் ஒரு பொருளுக்கு கீழே, அதன் விலை குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், அதற்கும் கீழே அதனை விட அதிக விலை குறிப்பிடப்பட்டு, அந்த விலையின் மேல் பெருக்கல் குறி இடப்பட்டிருக்கும்.
இதன் மூலம் நாம் வாங்க விரும்பும் பொருளானது முன்னர் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும், ஆனால் தற்போது விலை குறைந்திருப்பதாகவும் ஒரு பிம்பத்தை அந்நிறுவனம் ஏற்படுத்துகிறது.
வணிகம்
வேறு எடுத்துக்காட்டுகள்:
இது டார்க் பேட்டர்ன்கள் எனக் குறிப்பிடப்படும் முறைக்கு ஒரே ஒரு சிறிய எடுத்துக்காட்டு தான். நாம் அன்றாடம் பயன்படுத்தும் வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் முழுவதும் இந்த வகையான டார்க் பேட்டர்ன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
மீண்டும் ஆன்லைன் வணிகத் தளங்களையே உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட ஆடையை வாங்குவதற்காக அந்தப் பக்கத்திற்குச் செல்கிறீர்கள். நீங்கள் தேடும் அந்தக் குறிப்பிட்ட ஆடையின் விற்பனை விரைவில் முடியவிருப்பதாக அந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து, விற்பனை முடிவதற்குள் வாங்க வேண்டும் என்ற அவசரத்தில் எதையும் யோசிக்காமல் சட்டென வாங்கி விடுவீர்கள். இதன் மூலம் தேவையில்லாத அவசரத்தை பயனர்கள் மனதில் ஏற்படுத்தி தங்கள் பொருளை விற்பனை செய்திருக்கிறது அந்நிறுவனம்.
ட்விட்டர் அஞ்சல்
டார்க் பேட்டர்ன் குறித்த ட்விட்டர் பயனரின் பதிவு:
@darkpatterns Even my favorite brands are guilty @NBA with the classic (literal) dark pattern when trying to cancel League Pass during the offseason pic.twitter.com/BTypHNvBD5
— Dustin Beaudoin (@thedbeaudoin) July 10, 2023
வணிகம்
நிறுவனங்கள் டார்க் பேட்டர்ன்களைப் பயன்படுத்துவதால் என்ன பிரச்சினை?
இப்படி டார்க் பேட்டர்ன்களைப் பயன்படுத்துவதன் மூலம், நமக்குத் தேவையில்லாத பொருட்களையும், சேவைகளையும் நம்மிடம் அந்நிறுவனங்கள் விற்பனை செய்து வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறது நுகர்வோர் நலத்துறை.
மேலும், பயனர்களின் விருப்பத்தைக் கடந்து தங்களுடைய தேர்வை இந்த டார்க் பேட்டர்ன்களைப் பயன்படுத்துவதன் மூலம் பயனர்களின் மீது திணிக்கின்றன அந்நிறுவனங்கள்.
ஒரு சாதாரண 'ஆம், இல்லை' என்ற கேள்விக்குக் கூட, நிறுவனங்கள் தங்களுக்கு ஏதுவான 'ஆம்' என்ற தேர்வை பெரிதாகவும், 'இல்லை' என்ற தேர்வை சிறிய அளவிலும் காட்டி பயனர்களின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது நுகர்வோர் நலத்துறை.
வணிகம்
எந்தெந்த நிறுவனங்கள் டார்க் பேட்டர்ன்களைப் பயன்படுத்துகின்றன?
ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் உள்ள டாப் 240 செயலிகளில், 95% செயலிகள் இந்த டார்க் பேட்டர்ன்கள் முறையைப் பயன்படுத்துகின்றன. நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான வலைத்தளங்களில் 50%-கும் மேற்பட்ட வலைத்தளங்கள் டார்க் பேட்டர்ன்களைப் பயன்படுத்துகின்றன.
மக்களும் இது போன்ற டார்க் பேட்டர்ன்களில் கண்டறிந்து, தங்களுக்குத் தேவையானதை மட்டும் தேர்வு செய்யும் வகையில் தங்கள் சமூக வலைத்தளப் பதிவுகள் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது, நுகர்வோர் நலத்துறை.
உலகம் முழுவதும் மக்களை ஏமாற்றும் வகையில் டார்க் பேட்டர்ன்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது தற்போது அதிக வழக்குகள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.