ஊட்டி ஏரிக்கரைகளில் ரூ.3.20கோடி செலவில் மரக்குடில்கள், டெண்டுகள் அமைக்கும் பணி தீவிரம்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகிறார்கள். இவர்களுள் பலர் சுற்றுலா தலங்களை காண்பதில் ஆர்வம் காட்டுவதைவிட இயற்கை சூழ்ந்த அமைதியான பகுதிகளில் தங்கி ஒருசில நாட்கள் ஓய்வெடுக்க விரும்புகிறார்கள். அதற்காக புறநகர் பகுதிகளில் காட்டேஜ், ரிசார்ட் போன்ற இடங்களில் அறை எடுத்து தங்குகிறார்கள். இன்னும் சிலர் வனப்பகுதிகளில் உள்ள ரெசார்ட்டுகளில் அமைக்கப்பட்டுள்ள மரக்குடில்களில் தங்க அதிகளவு ஆர்வம் கொண்டுள்ளனர்.
தற்காலிக டெண்டுகள் அமைத்து தங்கும் சுற்றுலா பயணிகள்
மேலும் சிலர் இயற்கை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று தாங்களே தற்காலிக டெண்டுகள் அமைத்து அதில் தங்குகிறார்கள். இது போன்று தங்க தனியார் நிறுவனங்கள் அதிகளவில் கட்டணங்களை வசூல் செய்வதாக கூறப்படுகிறது. எனினும் சுற்றுலா பயணிகள் அதனை ஒரு பொருட்டாக கருதாமல் கட்டணத்தினை செலுத்தி தங்குகிறார்கள் என்றும் தெரிகிறது. இந்நிலையில் தற்போது தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3.20 கோடி செலவில் ஊட்டியில் உள்ள ஏரிக்கரை பகுதிகளில் மரக்குடில்கள், டெண்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணத்தில் மரக்குடில்கள்
இப்பணிகள் வரும் கோடை காலத்திற்குள் முடிக்கப்பட்டு சீசனுக்கு சுற்றுலா வரும் பயணிகளை இவ்விடங்களில் தங்க அனுமதிக்கும் எண்ணத்தில் நடந்து வருகிறது. இப்பணிகளை ஆய்வு செய்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தரமான வகையில், குடில்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையின்படி அமைக்கப்படும் இந்த மரக்குடில்கள், டெண்ட்களில் தங்க தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தினை விட குறைந்தளவில் வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட பணிகள் ஊட்டி ஏரிக்கரைகளில் நடக்கிறது
மேலும், இதில் தங்க சுற்றுலா பயணிகள் ஆன்லைன் புக்கிங் செய்ய ஏதுவான வசதிகள் செய்யப்படவுள்ள நிலையில், குறைந்த கட்டணத்தில் இயற்கை சூழலில் தங்கும் வாய்ப்பு சுற்றுலாவாசிகளுக்கு கிடைப்பதோடு சுற்றுலாத்துறைக்கும் இதன் மூலம் வருவாய் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன் முதற்கட்டமாக ஊட்டி எரிக்கரைகளில் மரத்திலான 4 குடில்கள், 2 ட்ரீ டாப் குடில்கள், 4 டெண்டுகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.