இந்தியாவிற்கு எதிரான காங்கிரசின் அருவருப்பு அரசியல்; ஹிண்டன்பர்க் குறித்து முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து
ஹிண்டன்பர்க் விவகாரம் இந்தியாவில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைய வேண்டும் என காங்கிரஸ் விரும்புவதாக முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் பாஜக எம்பியுமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்திய மக்களால் மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ், பொருளாதார அராஜகத்தை உருவாக்குவதிலும், இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை பரப்புவதிலும் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். பங்குச் சந்தை சீராக இயங்குவதை உறுதி செய்வது செபியின் சட்டப்பூர்வப் பொறுப்பு என்று கூறிய ரவிசங்கர் பிரசாத், ஹிண்டன்பர்க்கிற்கு எதிராக செபி நோட்டீஸ் அனுப்பியபோது, அதற்கு எந்த பதிலையும் கொடுக்காமல், இப்போது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் உருவாக்கி வருவதாக கூறியுள்ளார்.
மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை பூதாகரமாவதன் பின்னணி
முன்னதாக, கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) ஹிண்டன்பர்க் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அதானி குறித்த முறைகேட்டில் செபியின் தலைவர் மற்றும் அவரது கணவர் வெளிநாட்டில் உள்ள அதானியின் துணை நிறுவனங்கள் மூலம் ஆதாயம் பெற்றதாக குற்றம் சாட்டியது. எனினும், இதற்கு செபியின் தலைவர் மற்றும் அதானி நிறுவனத்தின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஹிண்டன்பர்க் செபி தலைவரின் மறுப்பு அறிக்கையை சுட்டிக் காட்டி மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்தது. இதற்கிடையே, ஹிண்டன்பர்க் அறிக்கையால், திங்கட்கிழமை இந்திய மூலதனச் சந்தை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதை குறிப்பிட்டு பேசிய பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், இந்திய பங்குச் சந்தைகள் முதலீட்டிற்கு பாதுகாப்பானவையாகவும், நம்பகத்தன்மையுடனும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.