
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
செய்தி முன்னோட்டம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக, காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று அறிவித்தார்.
ஒப்பந்தப்படி, தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடும்.
அந்த இரு கட்சிகளும் 2019ல் செய்து கொண்ட அதே ஒப்பந்ததை இப்போதும் எந்த மாற்றமும் இன்றி பின்பற்ற போகிறது.
2019 பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 39 மக்களவைத் தொகுதிகளுள் 38 இடங்களில் வெற்றி பெற்றது.
"திமுகவும் காங்கிரஸும் இணைந்து போராடுவோம், ஒன்றாகச் செல்வோம், ஒன்றாக வெற்றி பெறுவோம்" என்று வேணுகோபால் கூறினார்.
திமுக கூட்டணி நிறுத்தும் வேட்பாளர்கள் 40 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகம்
திமுகவுக்கு கமல் ஹாசன் ஆதரவு
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கும், மத்திய அரசின் கூட்டாட்சி விரோத போக்கிற்கும் எதிராக தமிழகம் போராடி வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு எப்படி தாக்குகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்." என்று மேலும் வேணுகோபால் கூறினார்.
மேலும், தமிழகத்தின் பெருமையை பாஜக தாக்க முயல்வதாக குற்றம் சாட்டிய அவர், "பாஜகவின் பிளவுபடுத்தும், மக்கள் விரோத அரசியலை எதிர்த்துப் போராடுவது முக்கியம்" என்றும் கூறினார்.
இதற்கிடையில், இன்று சென்னையில் உள்ள திமுக தலைமையகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியில் பணியாற்ற மநீம முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.