நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: இன்று என்ன விவாதிக்கப்பட்டது?
பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதம் இன்று(ஆகஸ்ட் 8) மக்களவையில் தொடங்கியது. விவாதத்தின் முதல் நாளான இன்று, மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய எதிர்க்கட்சி எம்பிக்கள், மணிப்பூரில் பெரும் பிளவை பாஜக அரசு உருவாக்குவதாக குற்றம் சாட்டினர். இந்த விவாதத்தைத் தொடங்கிவைத்த காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், மணிப்பூர் விவகாரத்தில் மௌனம் காக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் "மௌன விரதத்தை" முறியடிக்கவே, எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன என்று கூறினார். 'ஒரே இந்தியா' என்று பேசும் பாஜக அரசு இரண்டு மணிப்பூர்களை உருவாக்கியுள்ளதாக கூறிய அவர், ஒரு மணிப்பூர் மலைகளிலும்(பழங்குடியினர்) மற்றொன்று பள்ளத்தாக்கிலும்(மெய்த்தே சமூகம்) வாழ்கிறது என்று பேசினார்.
மேலும் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் பேசியாதவது:
"மணிப்பூர் நீதியைக் கோருகிறது. 'எங்கும் அநீதி இருந்தால், எல்லா இடங்களிலும் நீதிக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று அர்த்தம்' என்பது மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வார்த்தைகளாகும். மணிப்பூர் எரிந்தால் இந்தியா முழுவதும் எரியும். மணிப்பூர் பிளவுபட்டால் நாடும் பிளவுபடும். நாட்டின் தலைவர் என்ற முறையில் எங்கள் கோரிக்கைகளை ஏற்று, மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி சபைக்கு வந்து பேச வேண்டும். ஆனால், லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் பேசமாட்டேன் என அவர் மௌன விரதம் கடைபிடிக்கிறார். மணிப்பூரில் அவரது இரட்டை எஞ்சின் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதை பிரதமர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால்தான் மணிப்பூரில் 150 பேர் உயிரிழந்தனர். சுமார் 5000 வீடுகள் எரிக்கப்பட்டன. சுமார் 60,000 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். "
ராகுல் காந்தியின் உரை தள்ளி வைக்கப்பட்டது
இன்று இந்த விவாதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டது. அவரது பெயரும் விவாதிப்பவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் இன்று விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாடாளுமன்றத்தில் இல்லாததால் ராகுல் காந்தியின் உரையை தாமதப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ராகுல் காந்தி எப்போது உரையாற்ற போகிறார் என்பதை காங்கிரஸ் கட்சி 3 மணி நேரத்திற்கு முன்புதான் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. விவாதிப்பவர்களின் பெயர் பட்டியலில் இருந்து ராகுல் காந்தியின் பெயர் நீக்கப்பட்டதை சுட்டி காட்டிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, "ஒருவேளை ராகுல் காந்தி தாமதமாக எழுந்திருப்பாரோ என்னவோ" என்று நக்கலாக கூறினார்.
'பிரதமர் தனது தவறை ஏற்க விரும்பவில்லை': கௌரவ் கோகோய்
மேலும் பேசிய எம்பி கௌரவ் கோகோய், "பிரதமர் மோடி மௌனமாக இருப்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று, இது மாநில அரசின் பெரும் தோல்வி. இரண்டாவது, இது உள்துறைத் துறை மற்றும் தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெரும் தோல்வி. மூன்றாவது, பிரதமர் தான் தவறு செய்ததை ஏற்க விரும்பவில்லை." என்று கூறினார். லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் மணிப்பூர் குறித்து பிரதமர் அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரினார். இந்த விவாதத்திற்கு பதிலளித்த பாஜக, "1993 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் மணிப்பூரில் பெரும் வன்முறை நடந்தன. ஆனால், இரண்டு வன்முறைகளின் போதும் காங்கிரஸ் அரசு நாடாளுமன்றத்தில் அறிக்கையை வெளியிடவில்லை" என்று குற்றம்சாட்டியது.
'வெளிநாட்டு அரசாங்கங்கள் பாஜக அரசை குற்றம்சாட்டியுள்ளன': டி.ஆர்.பாலு பேச்சு
அதற்கு பிறகு பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரியா சுலே, "பிரதமர் மோடி தலைமையிலான கட்சி பெண்களை அவமானப்படுத்தியுள்ளது. மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும்" என்று வலியுறுத்தினார். அதன் பிறகு பேசிய, திமுக எம்பி டி.ஆர்.பாலு, "பிரதமர் இப்போது எங்கே இருக்கிறார். நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு தான் அவருக்கு பொதுமக்கள் வாக்களித்துள்ளனர். அவர் இங்கே வருவதை எது தடுக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார். "ஐரோப்பிய நாடாளுமன்றமும், பிரிட்டிஷ் நாடாளுமன்றமும் மணிப்பூரில் நிலவும் சட்டமீறலைக் கண்டித்து பாஜக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளன." என்றும் அவர் கூறினார். இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடர இருக்கும் இந்த விவாதத்தில் 5 மத்திய அமைச்சர்களும் 10 பாஜக எம்பிகளும் பேச இருக்கிறார்கள்.