வருமானவரித்துரையும், காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்கும்; என்ன நடந்தது?
பொதுத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள், இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்டவை வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளதாக இன்று காலை, காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இருப்பினும், காங்கிரஸ் அறிவிப்பை வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, டெல்லியில் உள்ள வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) அக்கட்சி மேல்முறையீடு செய்த பின்னர், கணக்குகள் செயல்பாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், காங்கிரஸின் பொருளாளர் அஜய் மாக்கன், கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்ட்டுள்ளதாக தெரிவித்து, இந்த நடவடிக்கை "ஜனநாயக செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கை" என்று விவரித்தார். அதோடு இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து ரூ.210 கோடி அபராதமாக வருமான வரித்துறை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது
"இது ஜனநாயக நடவடிக்கை இல்லை; இது ஒரு ஆளும் கட்சி பழிவாங்கல். நாங்கள் நீதித்துறை, ஊடகங்கள் மற்றும் மக்களிடம் நியாயம் கேட்கிறோம்,"என்று அஜய் மக்கன் கூறினார். காங்கிரசின் தேர்தல் ஆயத்தங்களை சீர்குலைப்பதற்காகவே, சமயம் பார்த்து, தேர்தல் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது. இந்த விவகாரம் தற்போது வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் உள்ள நிலையில், முடக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் கட்சி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கன் கூறினார். மேலும், விசாரணை நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கு விவரங்களை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்ததாக அஜய் மக்கன் விளக்கினார். 2018-19 தேர்தல் ஆண்டில், காங்கிரஸ் தனது கணக்குகளை 45 நாட்கள் தாமதமாக சமர்ப்பித்தது தான் முடக்கத்திற்கான காரணம் வருமானவரித்துறை கூறுகிறது.