
பள்ளிகளுக்கு மழைக்கான விடுமுறை அளிப்பதில் நிலவும் குழப்பத்திற்கு விரைவில் தீர்வு - பள்ளிக்கல்வித்துறை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் மழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம்.
பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு கருதி விடுக்கப்படும் இந்த விடுமுறைக்கான நடைமுறையில் தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநிலத்தில் பருவமழை காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் முடிவினை குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர்கள் எடுக்கும் நடைமுறை தான் தற்போது அமலில் உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் வானிலை அறிக்கையின் கனமழை, மிக கனமழை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை அடிப்படையில் ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்திற்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.
இந்த விடுமுறை குறித்த அறிவிப்பு முந்தைய நாளிலோ அல்லது மழை பெய்யும் தினத்தின் காலையிலோ தான் வெளியாகும்.
அவ்வாறு விடுக்கப்படும் விடுமுறையினை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
விடுமுறை
பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் தகவல்
இந்நிலையில், மழை காரணமாக விடுக்கப்படும் இந்த விடுமுறைகளில் சில மாவட்டங்களில் குழப்பம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
அண்மையில் நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்னும் உத்தரவு சர்ச்சையானது.
இதன் காரணமாக பள்ளி மாணவர்களும், பெற்றோரும் குழப்பமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
அதேபோல் நேற்று(நவ.,30)வானிலை அறிக்கை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
ஆனால் செங்கல்பட்டிற்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
செங்கல்பட்டில் சென்னையை சேர்ந்த சில பகுதிகளும் வரும் நிலையில், அங்குள்ளவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, இது போன்ற சிக்கல்களுக்கு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் தீர்வுக்காணப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.