உ.பி.யின் கோண்டாவில் திப்ருகர் செல்லும் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன; 4 பேர் பலி, மேலும் பலர் காயம்
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா ரயில் நிலையம் அருகே சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. சமீபத்திய தகவலின்படி, 4 பேர் பலி, மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். சண்டிகர் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை இரவு 11.35 மணிக்கு புறப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் ரயில், அசாமில் உள்ள திப்ருகர் நோக்கிச் சென்றது. அப்போது, உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச்-ஜிலாஹி ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டது. தற்போது ரயில்வே துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். இது குறித்து அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா ஷர்மாவிற்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உ.பி.,யில் ரயில் விபத்து
தடம் புரள்வதற்கு முன்னர் பெரும் சத்தம் கேட்டதாக டிரைவர் தெரிவிக்கிறார்
விபத்து நடந்த இடத்தில் குறைந்தது 15 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 40 மருத்துவக் குழு உறுப்பினர்கள் உள்ளனர். தற்சமயம் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, ரயிலின் லோகோ பைலட்டுகள் இருவரும் பத்திரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் தடம் புரளுவதற்கு முன், ட்ரைன் டிரைவர் ஏதோ வெடிப்பது போன்ற பலத்த சத்தம் கேட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. நாசவேலைக்கான வாய்ப்பு குறித்து ரயில்வே ஆய்வு செய்து வருகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டார்.