Loading...
கொளத்தூர் MLA வி.எஸ். பாபு உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி: இன்று மாலை திரு.வி.க. நகரில் இறுதிச்சடங்கு
கொளத்தூர் MLA வி.எஸ். பாபு உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

கொளத்தூர் MLA வி.எஸ். பாபு உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி: இன்று மாலை திரு.வி.க. நகரில் இறுதிச்சடங்கு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 20, 2026
08:21 am

செய்தி முன்னோட்டம்

உடல்நலக்குறைவால் காலமான சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடலுக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது உடல் இன்று மாலை திரு.வி.க. நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சுமார் 70 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த வி.எஸ். பாபு, நேற்று பிற்பகல் 2.24 மணியளவில் மாரடைப்பால் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இறுதிச்சடங்கு விவரம்

முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

மருத்துவமனையிலிருந்து வி.எஸ்.பாபுவின் உடல் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய், பெரம்பூரில் உள்ள வி.எஸ். பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "வி.எஸ். பாபுவின் மறைவு கட்சி, குடும்பம் தாண்டி வடசென்னை மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு" எனத் தெரிவித்தார்.

வி.எஸ். பாபுவின் உடல் இன்று மாலை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மாலை 4.30 மணியளவில் திரு.வி.க. நகர் தாங்கல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

புகார்

"எம்.எல்.ஏ. மரணத்தில் சந்தேகம்"

இதற்கிடையே, வி.எஸ். பாபுவின் மரணம் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

வி.எஸ். பாபு 70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்த உண்மையான நிலவரத்தை வெளியிடக் கோரி தேவராஜன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வி.எஸ். பாபு காலமான செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தேவராஜன் காவல்துறைக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT