மகளிர் உரிமை தொகை: 91 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, பெண்களுக்கு உரிமை தொகை வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கான முதற்கட்ட பணியாக, தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, வீடு வீடாக விண்ணப்பங்கள் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து, குடும்ப பெண்களுக்கு, நுகர்வோர் விற்பனை கூடங்களில் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. இதோடு சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும், இந்த உரிமை தொகை, வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் செயல்படத்தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. கடந்த 20ந்தேதி முதல் தொடங்கிய விண்ணப்ப விநியோகம் இது வரை, 80% முடிவடைந்துள்ளதாகவும், 91 லட்சத்து 36 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரியில் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.