உஷாரா இருப்பேன், கவலை வேண்டாம்; ரஜினிகாந்த் அறிவுரையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று நடைபெற்ற 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், துரைமுருகனை காட்டி எச்சரித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையை ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலைஞருடனான தனது பயணம் குறித்த தொகுப்புகளை 'கலைஞர் எனும் தாய்' என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் அதை பெற்றுக் கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் துரைமுருகனை குறிப்பிட்டு, அவரைப் போன்றவர்களிடம் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நகைச்சுவையாகக் கூறினார். இது கூட்டத்தில் சிரிப்பொலியை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
நடிகர் ரஜினிகாந்த் பேசிய பிறகு, மைக் பிடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் தன்னை விட ஒரு வயது மூத்தவர் என்றும், அவரது அறிவுரையை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார். இதுகுறித்து கூறுகையில், "இந்த நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு வைத்தது போல நம்முடைய சூப்பர் ஸ்டார் வருகை தந்து மனம் திறந்து என்னை ஊக்கப்படுத்தக்கூடிய வகையில் பேசினார். அவருக்கு என்னைவிட ஒரு வயது கூடதான், அதனால் அறிவுரையும் சொன்னார். அவர் சொன்ன அத்தனையையும் நான் சரியாக புரிந்துகொண்டேன். அவர் பயப்பட வேண்டாம். எதிலும் நான் தவறிவிடமாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன் என்ற அந்த உறுதியை அவருக்கு நான் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் கூறினார். அவரது இந்த பேச்சு கூட்டத்தினரிடையே மேலும் சிரிப்பொலியை அதிகப்படுத்தியது.