தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நாளை கேரளா பயணம்: கோவையில் 'பெரியார் அறிவுலகம்' திறப்புக்கு பின் திருச்சூர் செல்கிறார்
செய்தி முன்னோட்டம்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை கேரளா மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் கேரளாவுக்கு செல்லும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும். முன்னதாக கோவை காந்திபுரத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை' வெள்ளிக்கிழமை காலை அவர் திறந்து வைப்பார். கோவை நிகழ்ச்சிகள் முடிந்தவுடன், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருச்சூருக்கு முதல்வர் விஜய் பயணம் மேற்கொள்கிறார்.
பெரியார் அறிவுலகம்
ரூ.300 கோடியில் பிரம்மாண்ட 'பெரியார் அறிவுலகம்' திறப்பு
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சுமார் 7 ஏக்கர் பரப்பளவில், ரூ.300 கோடி செலவில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பில் 'பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையம்' அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேகப் படிப்பகங்கள், ஆராய்ச்சி மையங்கள், அறிவியல் பூங்கா, கோளரங்கம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் செல்லும் முதல்வர் விஜய், அங்கிருந்து கார் மூலம் காந்திபுரம் சென்று பெரியார் சிலையை திறந்துவைத்து, பெரியார் அறிவுலகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கிறார்.
கேரளா
கேரளப் பயணம் மற்றும் திருச்சூர் கல்யாண் குடும்ப விழா
திருச்சூரில் உள்ள பிரபல தொழில்முனைவோரும் 'கல்யாண் ஜுவல்லர்ஸ்' குழுமத்தின் தலைவருமான டி.எஸ். கல்யாணராமனின் இல்லத்தில் நடைபெறும் விசேஷ நவரத்திரி விழாவில் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் நாட்டின் பல முக்கியப் பிரபலங்களும் கலந்துகொள்கின்றனர்.
பயணத்தின் இடையே குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலுக்கும் சென்று முதல்வர் விஜய் தரிசனம் செய்யக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, விஜயவாடாவுக்கு பயணம் மேற்கொண்டு கனக துர்க்கை அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசியதைத் தொடர்ந்து, தற்போது முதல்வரின் இந்த கேரளா விஜயமும் அரசியல் மற்றும் பொதுவெளியில் கவனத்தைப் பெற்றுள்ளது.