CJP தலைவர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்காவுக்கு 5 நாள் சிறை; திகார் சிறையில் அடைப்பு
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் போராட்ட களமாக கருதப்பட்டு வந்த ஜந்தர் மந்தர் பகுதி அண்மையில் போராட்ட மண்டலப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அங்குத் தடையை மீறி நுழைய முயன்ற காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகிய இருவருக்கு 5 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்புப் திருத்தப் பணிக்கு (SIR) எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமாவை வலியுறுத்தியும் CJP அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பின்னணி
சிறை தண்டனைக்கான பின்னணியும் வழக்கு விவரமும்
டெல்லியின் சிறப்புச் செயல்முறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரை 5 நாட்களுக்கு திகார் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
அதேவேளையில், அவர்களுடன் கைது செய்யப்பட்ட அஜின்கியா ஷிண்டே என்பவர் அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட்டதை தொடர்ந்து விடுவிக்கப்பட்டார்.
தடையை மீறி அத்துமீறி நுழைந்தது, அமைதிப் பத்திர நிபந்தனைகளை மீறியது, தடையாணையை மீறியது மற்றும் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சவால்
நரேந்திர மோடி அரசுக்கு சி.ஜே.பி நிறுவனரின் சவால்
சி.ஜே.பி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே சமூக வலைதளப் பதிவில் அரசின் இந்நடவடிக்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
"தேசியக் கொடியை ஏந்தி ஜந்தர் மந்தரில் குரல் எழுப்பியதுதான் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா செய்த குற்றமா? பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சலிருந்தால் இதுபோன்ற கோழைத்தனமான அடக்குமுறைகளுக்குப் பின்னால் ஒளியாமல், அவசரநிலையை அதிகாரப்பூர்வமாகப் பிரகடனம் செய்யட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஜந்தர் மந்தர் போராட்ட மண்டலப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, ராம்லீலா மைதானம் உள்ளிட்ட மாற்று இடங்களை டெல்லி காவல்துறை ஒதுக்கியுள்ள போதிலும், எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் இம்முடிவுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.