சென்னையில் நடைமுறைக்கு வந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள்: குறிப்பிட்ட வாகனங்களுக்கு தடை
சென்னையில் வண்டலூர்- கேளம்பாக்கம் பகுதியில் வார இறுதி நாட்களில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும், பள்ளி, கல்லூரி வாகனங்களின் போக்குவரத்து காரணமாகவும், வெளியூர்களில் இருந்து நகருக்கு நுழையும் லாரிகள் காரணமாக அங்கே கடும் நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து இருந்தனர். அதன் தொடர்ச்சியாக சென்னை போக்குவரத்து காவல்துறை வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இன்று முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல், இரவு 10 மணி வரையும் கனரக வாகனங்கள் செல்லத்தடை விதித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தாம்பரம் மாநகர காவல்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.