சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை: மனைவி மற்றும் கள்ளக்காதலன் சதியா?
செய்தி முன்னோட்டம்
சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மனைவியால் தூக்க மாத்திரை கொடுத்துப் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்(58) என்பவர் சென்னை ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நுங்கம்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவரது அறையில் இருந்து திடீரென புகை வந்ததை அடுத்து, அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆதாரம்
தடயவியல் ஆய்வும் சிசிடிவி ஆதாரமும்
சம்பவம் நடந்த அறையில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டபோது பெட்ரோல் வாசனை வீசியுள்ளது.
இது குறித்து ராஜின் மனைவி செல்வராணியிடம் கேட்டபோது, போக்சோ வழக்கு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் ராஜ் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளார்.
ஆனால், குடியிருப்பு பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சம்பவம் நடந்த நேரத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய காட்சிகள் பதிவாகியிருந்தன.
கொடூரம்
செல்போன் தகராறில் அரங்கேறிய கொடூரம்
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், செல்வராணி அடிக்கடி செல்போனில் பேசுவதைக் கண்டித்த ராஜ், அவரது செல்போனைப் பறிமுதல் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வராணி, நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தேவா என்பவருடன் இணைந்து கொலையைத் திட்டமிட்டுள்ளார்.
உணவில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்து ராஜ் மயக்கமடைந்ததும், தேவாவின் உதவியுடன் பெட்ரோல் ஊற்றி அவரை எரித்துக் கொன்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தலைமறைவாக உள்ள தேவாவை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.