Page Loader
மெட்ரோ பணிகளுக்காக சென்னையில் 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதிகள்

மெட்ரோ பணிகளுக்காக சென்னையில் 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 25, 2024
01:12 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக சோதனை அடிப்படையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பரங்கிமலையில் உள்ள மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) இரவு 11 மணி முதல் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதன்படி, கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவை வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாற்றம்

போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்ட பகுதிகள்

சென்னை காவல்துறையின் இந்த உத்தரவின்படி, போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பில் உள்ள மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக புதிய சாலையை நோக்கி இடதுபுறம் திரும்பி, புகாரி ஓட்டலுக்கு எதிரே உள்ள போர் கல்லறை - ராணுவ சாலை சந்திப்பில் டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூ வலதுபுறம் திரும்பி, கண்டோன்மென்ட் சாலை இடதுபுறம் திருப்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தனகோட்டி ராஜா தெரு வழியாக கிண்டி தொழிற்பேட்டை எஸ்டேட் தெற்கு கட்ட சாலை 100 அடி சாலை சந்திப்புக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து வாகனங்கள் கத்திப்பாரா மேம்பாலத்தை அடைய வலதுபுறமாகவும், வடபழனியை அடைய இடதுபுறமாகவும் செல்ல வேண்டும்.