டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் 2026-இல் சோதனைக்கு வருகிறது; ரூ.3,657 கோடி மதிப்பில் CMRL ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தில், டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 70 மெட்ரோ ரயில்களை தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ரூ.3,657.53 கோடி மதிப்பில் BEML நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,"சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 2ம் கட்ட திட்டத்தில், 3 மற்றும் 5 வழித்தடங்களில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 70 மெட்ரோ ரயில்களை BEML நிறுவனம் தயாரிக்கும். இந்த ரயில்களில் 3 ரயில் பெட்டிகளுடன் கூடிய வாகனங்கள் அமைக்கப்படவுள்ளன." எனத்தெரிவித்துள்ளது.
டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் 2026-இல் சோதனைக்கு வர ஒப்பந்தம்
ஒப்பந்தத்தில் வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ ரயில்களுக்கும் இயந்திரங்களுக்கும் 15 ஆண்டுகள் பராமரிப்பு ஆகியவையும் அடங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயில் 2026-ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்படும். பின்னர், கடுமையான பாதைகளில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரயில்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும். பிறகு, மீதமுள்ள 69 மெட்ரோ ரயில்களும் 2027 முதல் 2029 வரை ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்படும்.